உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருச்செந்துார் கோவிலுக்குள் த.வெ.க., கோஷத்தால் சலசலப்பு

 திருச்செந்துார் கோவிலுக்குள் த.வெ.க., கோஷத்தால் சலசலப்பு

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலுக்குள், அரசியல் சார்பாக கோஷமிட்டபடி, வீடியோ எடுத்து வெளியிட்ட, த.வெ.க., தொண்டர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன், வீடியோ கேமரா பயன் படுத்த தடை உள்ளது. மேலும், கோவிலுக்குள் அரசியல் கட்சி சார்பாக கோஷமிடவும், பிரசாரங்கள் செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து, வரிசையில் நின்ற த.வெ.க., தொண்டர் ஒருவர், 'முருகனுக்கு அரோகரா; தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா; நடிகர் விஜய்க்கு அரோகரா என்ற கோஷத்துடனும், அங்கு தரிசனத்திற்காக காத்திருந்த சில பக்தர்களிடம், 'வரும் சட்டசபைத் தேர்தலில் த.வெ.க.,வுக்கு ஓட்டு போடுங்கள்; த.வெ.க., ஆட்சி அமையும். அமைந்ததும், தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையே இருக்காது. ' பக்தர்கள் அனைவருக்கும் இலவச தரிசனத்துக்கான பாஸ் வழங்கப்படும்; நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் எல்லாம் தமிழக அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது. அவர், அரசியலில் வீணா போய்விடுவார். அவர் பேசுவார்; அவரால் எதுவும் செய்ய முடியாது' எனச் சொல்லி, பிரசாரத்திலும் ஈடுபட்டார். அந்த வீடியோ, தற்போது வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அந்த நபர் மீது கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் போலீசில் அளித்த அந்த புகாரில், 'வழிபாட்டுத் தலங்களில் அரசியல் செயல்பாடுகள் கூடாது என ஏற்கனவே உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 'அதற்கு எதிராக, த.வெ.க.,வை சேர்ந்த ஒரு நபர் திருச்செந்துார் கோவில் வளாகத்தில் இருந்தபடி, அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 'கூடவே, கோவில் வளாகத்துக்குள் வீடியோ எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்த நபர், தன்னுடைய பிரசாரத்தை வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 'அதனால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடவே, சமூக வலைதளங்களில் இருந்து, குறிப்பிட்ட அந்த வீடியோ பதிவை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ