5,000 சதுர அடி தொழிற்சாலைகளுக்கு சுயசான்று முறையில் கட்டட அனுமதி பணிகளை துவக்கியது டி.டி.சி.பி.,
சென்னை:தமிழகத்தில், 5,000 சதுர அடி வரையிலான தொழிற்சாலைகளுக்கு, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான பூர்வாங்க பணிகளை, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., துவக்கி உள்ளது. தமிழகத்தில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் அளிக்கலாம். இதில், சிறிய அளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. வரவேற்பு
இதையடுத்து, 2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடு கட்ட, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம், 2024 ஜூலையில் துவங்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை இத்திட்டத்தில், 75,000 பேர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் அலைக்கழிப்பில் சிக்காமல், எளிய முறையில் அதிகமானோர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, 5,000 சதுர அடி வரையிலான, சிறிய மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சுயசான்று முறையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஒப்புதல்
இதையடுத்து, 5,000 சதுர அடி வரையிலான, குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு, ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இதனால், சிறிய அளவிலான தொழிற்சாலைகள் துவங்குவோர், குறிப்பிட்ட சில ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். அடுத்த சில நிமிடங்களில், கட்டண விபரம் தெரிவிக்கப்படும். கட்டணத்தை செலுத்தியவுடன், சில நிமிடங்களில் இணையதளம் வாயிலாகவே கட்டட அனுமதிக்கான கடிதம், வரைபடம் ஆகியவை கிடைத்து விடும். குறிப்பாக, ஊராட்சி பகுதிகளில், தொழிற்சாலை கட்டடங்கள் கட்டுவதற்கான சாலை அகலம், 22 அடியில் இருந்து, 19 அடியாகவும் இதில் குறைக்கப்பட உள்ளது. இதற்கான வழிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிட இருக்கிறோம். இதற்கென தனி இணையதளம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும், அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டு, சுயசான்று கட்டட அனுமதி திட்டம் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.