பகுதி நேர வேலை எனக்கூறி மோசடி செய்த இருவர் கைது
சென்னை, 'பகுதி நேர வேலை' என்ற பெயரில், 7.31 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, 'சைபர் கிரைம்' போலீசார் கைது செய்தனர்.'சைபர் கிரைம்' தலைமையகம் வெளியிட்ட அறிக்கை:சமீப காலமாக சைபர் குற்றவாளிகள், 'டெலிகிராம்' செயலி வாயிலாக, பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு தகவல் அனுப்பி ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கொடுக்கும் பணியை செய்து முடித்தால், பெரிய லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, மக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.திருப்பூரை சேர்ந்த புகார்தாரரை, 'டெலிகிராமில்' தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி, அந்நிறுவனம் வாடிக்கையாளர் மதிப்பீடு அளிப்பதன் அடிப்படையில், ஹோட்டல்களை முதன்மைபடுத்தும் பணியை செய்து வருகிறது. நீங்கள், 'ஆன்லைன்' வாயிலாக வீட்டில் இருந்தப்படியே, குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கு, மதிப்பெண் வழங்கும் பணியை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தினமும் உங்களது வங்கி கணக்கிற்கு, கமிஷன் வரும் எனக்கூறி நம்ப வைத்துள்ளனர்.அதன்படி புகார்தாரருக்கு, முதலில், 959 ரூபாயை, அவரது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர். பின், நிறுவனத்தில் முதலீடு செய்தால், கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி, 8,000 ரூபாய் முதலீடு செய்து, 15,917 ரூபாய் கமிஷன் பெற்றுள்ளார். அதன்பின், பல்வேறு வகையில், 7.31 லட்சம் ரூபாயை புகார்தாரர் செலுத்தினார். அதற்கு, 10.90 லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்பணத்தை புகார்தாரரால் எடுக்க முடியவில்லை.முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறி, 5.45 லட்சம் ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளனர். அதன்பின் சந்தேகம் வந்ததால், அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில் தர்மபுரியில் உள்ள ஐந்து வங்கி கணக்குகளுக்கு, 2.65 லட்சம் ரூபாய் சென்றதும், தர்மபுரியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், அவரது உறவினர்கள், நண்பர்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, மோசடி செய்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, செல்வகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த, திருவாரூரை சேர்ந்த கவுதம்குமார் ஆகியோரை, 'சைபர் கிரைம்' போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.