உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை வேந்தர் தேடல் குழுவில் மாநில அரசு பிரதிநிதியை நீக்கியது யு.ஜி.சி.,

துணை வேந்தர் தேடல் குழுவில் மாநில அரசு பிரதிநிதியை நீக்கியது யு.ஜி.சி.,

சென்னை:பல்கலை துணை வேந்தர் தேடல் குழுவில், மாநில அரசு பிரதிநிதியை நீக்கி, புதிய விதிமுறைகளை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்கலைகள், கல்லுாரிகளுக்கான ஆசிரியர், கல்வி பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள், உயர் கல்வி நிறுவனங்களின் பராமரிப்பு சார்ந்த விதிகளை வகுத்து, 'உயர் கல்விக்கான வரைவு கொள்கை - 2025'ஐ, வெளியிட்டார்.அதில், புதுமையான கற்பித்தல் முறைகள், 'டிஜிட்டல்' உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி நிதியுதவிக்கான பங்களிப்புகள் போன்ற தொழில்முறை சாதனைகளை அங்கீகரிக்கும் விதிகளை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக தகுதிகளின் நோக்கத்தை, இந்த வரைவு கொள்கை விரிவுபடுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

துணை வேந்தர் நியமனம்

பல்கலை துணை வேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில், முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. பொதுவாக, தமிழகத்தில், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் பல்கலைகளில், அரசு பிரதிநிதி, வேந்தரான கவர்னரின் பிரதிநிதி, பல்கலையின் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இடம் பெறுவது வழக்கம். இதில், பல்கலை மானிய குழு உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என, கவர்னர் ரவி வலியுறுத்தி வந்தார்.இதனால், மாநில பல்கலைகளை புரிந்து கொண்ட, தகுதியான நபர்கள் கிடைக்க மாட்டார்கள் எனவும், யு.ஜி.சி., விரும்பும் நபரை, மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் பல்கலையின் உயர் பதவியில் அமர்த்தி, மாநில கல்வி கட்டமைப்பை சிதைக்க செய்து விடும் என்றும், உயர் கல்வி துறையினர் கூறி வந்தனர்.

அங்கீகாரம் ரத்து

இதுகுறித்து ஆளும் தி.மு.க., அரசுக்கும், பல்கலைகளின் வேந்தரான கவர்னருக்கும் மோதல் நீடிக்கிறது; வழக்கும் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வரைவில், துணை வேந்தருக்கான தேடல் குழுவில், மாநில அரசு பிரதிநிதியை நீக்கியதுடன், வேந்தர் தலைமையிலான குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதி, பல்கலையின் செனட் அல்லது சிண்டிகேட் குழுவின் பிரதிநிதி மட்டும் இடம் பெறுவர் என்று கூறப்பட்டுஉள்ளது.இதுவரை, கற்பித்தலில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே, துணை வேந்தராக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய விதியின்படி, தொழில் துறை, பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் மூத்த நிலை பணி அனுபவம் பெற்றவர்களும் துணை வேந்தராகலாம் என கூறப்பட்டுள்ளது.இந்த விதிகளை கடைப்பிடிக்காத கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன் படிப்பை முடிப் போருக்கான சான்றிதழ் களும் செல்லாததாக்கப் படும் என கூறப்பட்டுள்ளது.இதுபோன்ற விதிகளால், இந்த வரைவு கொள்கை வெளியிடப்பட்ட, 24 மணி நேரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுவரை, இளங்கலை, முதுகலை பட்டங்களில், எந்த பாடங்களை தேர்வு செய்து படித்தனரோ, அவர்களே சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். புதிய கல்வி கொள்கையின்படி, வெவ்வேறு துறைகளில் பட்டங்களை பெற்றவர்களும், எந்த பாடத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டாரோ, அதற்கான ஆசிரியராக சேரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, உதவி பேராசிரியராக பணியில் சேருவோர், நான்கு ஆண்டுகளுக்கு பின், முதல்நிலை பதவி உயர்வையும், அடுத்த ஐந்தாண்டுகளில் இரண்டாம் நிலை பதவி உயர்வையும், அடுத்த மூன்றாண்டுகளில் மூன்றாம் நிலை பதவி உயர்வுடன் இணை பேராசிரியராகவும் ஆகலாம். அதேநேரம், இது கட்டாயம் என்று கூறப்படவில்லை.அதேபோல, கற்பித்தல் பணியில் ஈடுபட்டோரை பணியில் சேர்ப்பதை போல, அதே துறையில் கல்வி சாராத, நேரடியாக பணி செய்தவருக்கும் 10 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்களை கள அறிவுக்கும், பணி வாய்ப்புக்கும் வழிகாட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.மொத்த ஆசிரியர்களில் 10 சதவீதம் பேரை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் அனுமதி அளித்துள்ளது. நுாலகர், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது.ஆய்விதழ்களை வெளியிடுவது, நுால்களை வெளியிடுவதில், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான வயது வரம்பு சலுகையுடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:இந்த வரைவு கொள்கையில், ஏற்கனவே உள்ள பல விதிகள் தளர்த்தப்பட்டும், நீக்கப்பட்டும், புதிய விதிகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இதில், சாதங்களும், பாதகங்களும் உள்ளதால், ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து, யு.ஜி.சி.,க்கு கருத்துகளை அனுப்பலாம். அதேநேரம், துணை வேந்தர் நியமனம், பதவி காலம் உள்ளிட்டவை, அதிகளவில் அரசு மற்றும் தனியார் பல்கலைகளை வைத்துள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பாதகமாகவே அமையும். மாநிலங்களின் சுயஅதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி