உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., மாநாட்டுக்கு திரண்ட கூட்டம் மத்திய அமைச்சர் அமித் ஷா அப்செட்

பா.ஜ., மாநாட்டுக்கு திரண்ட கூட்டம் மத்திய அமைச்சர் அமித் ஷா அப்செட்

திருநெல்வேலியில் நேற்று முன்தினம், பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு நடந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட ஐந்து லோக்சபா தொகுதிகளில் இருக்கும் பூத் கமிட்டியினரை வரவழைத்து மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். 'மாநாட்டுக்கு குறைந்தபட்சம் 1.5 லட்சம் பா.ஜ., தொண்டர்கள் வருவர்' எனக் கூறி வந்த, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், இதற்காக மாநாட்டு பந்தல் முன்பாக, சுமார் 20 ஆயிரம் சேர்களை போட்டு வைத்திருந்தார். ஆனால், மாநாட்டில் 6,000 பெண்கள் உள்பட, 17,000 பேர் மட்டுமே வந்திருந்ததாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறின. இதனால், 3,000 சேர்கள் காலியாகக் கிடந்தன. அதோடு, மாநாட்டில் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கும் போதே, மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. இதனால், அமித் ஷா அப்செட் ஆனதாக கூறுகின்றனர்.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

'மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டுவோம். மாநாட்டுக்கு எப்படியும் 1.5 லட்சம் பேர் வருவர்' என்று, தமிழக பா.ஜ., தரப்பில் அமித் ஷாவிடம் சொல்லி இருந்தனர். ஆனால், மாநாட்டு பந்தலுக்குள் நுழைந்ததுமே அமித் ஷா, கூடியிருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம், எதிர்பார்த்ததை விட பல மடங்கு குறைவாக, ஆட்கள் திரண்டிருந்தனர். பல இடங்களில் போடப்பட்டிருந்த சேர்கள் காலியாக இருந்தன. இருந்தபோதும், தன்னுடைய அதிருப்தியை காட்டிக் கொள்ளாமல் அமித் ஷா மேடையில், தயாரித்துக் கொடுத்ததை அப்படியே பேசி விட்டார். மாநாடு கூட்டம் முடிந்ததும், திருநெல்வேலி பெருமாள்புரத்தில் இருக்கும் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வீட்டுக்குச் சென்றார். அங்கு, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜ., மற்றும் நகரின் முக்கியப் பிரமுகர்களை சந்தித்தார். பின், பா.ஜ., தலைவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது, அனைவருடனும் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது, நடைபெற்ற மாநாடு குறித்த தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். 'அடுத்தடுத்து நடக்கும் பா.ஜ., பூத் கமிட்டி மாநாடுகளுக்கு, இப்படிப்பட்ட சூழல் இருக்கக் கூடாது' என்றும் கூறினார். அதோடு, 'துாத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது முதல், தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் என்னோடு தான் இருக்கிறீர்கள். ஆனால், ஆளாளுக்கு ஒரு பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு உள்ளீர்கள். தலைவர்களுக்கிடையே உறவு சீராக இல்லை என்பது, ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் எனக்கு நன்கு உணர்த்தின. அனைத்து தலைவர்களும், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்கள் வரை எவ்வித வித்தியாசமும் இன்றி இணைந்து செயல்பட வேண்டும்' என அமித் ஷா கூறியுள்ளார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ