சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தாமதமாவதால், அடுத்தகட்டமாக போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. தொழிற்சங்கங்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பின், ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில், ஜூலை 27ல் நடந்தது. முதல் கூட்டம் என்பதால், தொழிற்சங்கங்கள் தரப்பில் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சு, ஒரு வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை நடத்தப்படாததால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது: முதல்கட்ட முத்தரப்பு பேச்சில், தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்; போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை அரசு ஏற்க வேண்டும்; தனியார்மயமாக்கல் கூடாது உள்ளிட்டவை குறித்து பேசினோம்.அடுத்தகட்ட பேச்சு, 10 நாளில் துவங்கும் என அறிவித்தது நிர்வாகம்; தற்போது மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் அடுத்தகட்ட பேச்சுக்கான தேதியை கூட அறிவிக்கவில்லை. இது, ஒட்டுமொத்த போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்து கூட்டம் நடத்த உள்ளோம். அதில், போராட்டங்கள் குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தீபாவளி பண்டிகையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்குவதில் நிர்வாகம் கவனம் செலுத்தியதால், தாமதம் ஏற்பட்டது. அடுத்தகட்ட பேச்சு தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்றனர்.