உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு காணாத விலை உயர்வு; தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு

வரலாறு காணாத விலை உயர்வு; தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு

சென்னை: தமிழகத்தில் தங்கம் சவரன் விலை, வரலாறு காணாத அளவுக்கு, 63,000 ரூபாயை தாண்டியதால், விற்பனை, 20 சதவீதம் குறைந்துள்ளது.இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு, தங்கத்தை மட்டுமே பணமாக மாற்ற முடியும். எனவே, தங்கம் விலை உயர்ந்தாலும், பலர் வாங்கும் அளவை குறைத்து வாங்குகின்றனர். தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில், பழையது, புதியது என, தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 - 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அதற்கு பதிலடியாக அந்நாடுகளும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளன. இதனால், உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.எனவே, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். சீனாவும் அன்னிய செலாவணி கையிருப்பை தங்கமாக மாற்றி வருகிறது. இதனால், உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, எப்போதும் இல்லாத வகையில், 63,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜன., 1ல் சவரன், 57,200 ரூபாய்க்கு விற்பனையானது. ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில், சவரனுக்கு, 6,240 ரூபாய் அதிகரித்துள்ளது. குறுகிய நாட்களில் தங்கம் விலை மிகவும் அதிகம் அதிகரித்து வருவது, இதுவே முதல் முறை. இதனால், தங்கம் விற்பனை சரிவடைந்துள்ளது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''பாதுகாப்பான முதலீடு என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக, தங்கம் விற்பனை, 20 சதவீதம் வரை குறைந்துள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தத்வமசி
பிப் 08, 2025 10:06

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தால் அதைப் பற்றி யாரும் கவலைப் படப் போவதில்லை. ஆனால் இதை வைத்து சேதாரம் மற்றும் செய்கூலியிலேயே மற்றொரு கடையை திறக்கும் நகை கடைகளை என்ன செய்யலாம் ? சேதாரம் என்பது பல நாடுகளில் கிடையாது. ஆனால் எங்கெல்லாம் இந்தியர்கள் நகை கடைகளை வைத்துள்ளனரோ அங்கு தான் சேதாரம் தண்டமாகச் செல்கிறது.


lourdu samy
பிப் 08, 2025 11:37

அரசாங்கம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும், ஏழைகள் பாவம், சேதாரம் முற்றிலும் நீக்க படவேண்டும், மத்திய அரசு நினைத்தால் இதை செய்யலாம்.


lourdu samy
பிப் 08, 2025 11:39

மத்திய அரசு நினைத்தால் சேதாரம் இல்லாமல் கொடுக்கலாம்


முக்கிய வீடியோ