அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு
தஞ்சாவூர்:தஞ்சாவூர், தளவாய்பாளையம், வீரையன் நகரில் வசிப்பவர் ரெங்கசாமி. தஞ்சாவூர் தொகுதியில், 2011ல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். தொடர்ந்து 2016 தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர், அ.ம.மு.க.,வில் இணைந்தார்.கட்சி தாவல் தடைச்சட்டத்தில் பதவி நீக்கத்துக்குள்ளான, 18 எம்.எல்.ஏ.,க்களில் ரெங்கசாமியும் ஒருவர். அ.ம.மு.க.,வில் துணை பொதுச்செயலராகஉள்ளார்.2011 - 2017 கால கட்டத்தில் ரெங்கசாமி எம்.எல்.ஏ.வாக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றன.ரெங்கசாமி, அவரது மனைவி இந்திரா, இளைய மகன் வினோபாரத் ஆகிய மூவர் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக, 1.49 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது.ரெங்கசாமி வீட்டில் நேற்று தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அன்பரசன் தலைமையிலான போலீசார் காலை, 7:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை சோதனை நடத்தினர்.அப்போது, ரெங்கசாமி சென்னையில் இருந்ததால், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். சொத்து ஆவணங்கள் வங்கியில் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியதால், அது தொடர்பாக ஆய்வு செய்த பின், மேலும் தகவல்கள் தெரிய வரும். ரெய்டு காரணமாக ரெங்கசாமி வீட்டின் முன் ஏராளமான கட்சியினர் குவிந்தனர்.