சென்னை: 'அனைத்திலும் சமரசம் செய்து, பா.ஜ.,விடம் சரணடைந்து கிடப்பது தான், தி.மு.க., தலைமை குடும்பத்தின் வாடிக்கை' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை:
தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே, அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போல, பொய்யாக தி.மு.க., மார்தட்டிக் கொண்டு இருக்கிறது. சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்னரே அளித்திருந்தால், பா.ஜ., இதை கையில் எடுத்திருக்காது. ஆனால், 'பிரதமர் வருகை; தமிழகத்திற்கு பெருமை' என்று வாஞ்சையோடு சொல்லி சிலாகித்துக் கொண்டது தி.மு.க., அரசு. சோழப் பேரரசின் பெருமையை கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, மத்திய பா.ஜ., அரசு கையில் அடைக்கலம் புகுந்து, தமிழகத்தை அடகு வைத்தது போலவே, இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது. கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும், வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் பா.ஜ., அரசு, இப்போது சோழர்களின் பெருமையை பேசுவது, முழுக்க முழுக்க கபட நாடகம். ஏற்கனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதை இயல்பாக கொண்ட தி.மு.க., இப்போது மத்திய பா.ஜ., அரசின் கபட நாடகத்திற்கு தாள்பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தை காட்டியுள்ளது. எதிர் எதிராக இருப்பது போல காட்டிக் கொண்டே உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து, ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும், 'ஓரணியில் கபடதாரிகள்' என்று தானே அழைக்க வேண்டும். இப்படி சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்திருக்கும் இந்த இரண்டு கபடதாரிகளுக்கும், த.வெ.க., உண்மையை வெளிச்சம் போட்டு மக்களிடம் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். கொள்கை, கோட்பாடுகளுடன் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி, இன்று அனைத்திலும் சமரசம் செய்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக உள்ள பா.ஜ.,விடம் சரணடைந்து கிடக்கிறது. இது தான் தி.மு.க., தலைமை குடும்பத்தின் வாடிக்கை. பா.ஜ., - தி.மு.க., இரு கட்சிகளின் மறைமுகமான கபட நாடக அரசியலுக்கு தக்க பதிலடியை, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறுதியாக தருவர். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.