சென்னை : - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்தபோதிலும், 8.12 சதவீத ஓட்டுகளை பெற்றதால், மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துஉள்ளது. இடைத்தேர்தல் என்பதால், முழு மூச்சில் வேலை செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சீமான் நம்புகிறார். தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளும் போட்டியிடுவதால் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்தாலும் கவுரவமே என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க.,வின் புகழேந்தி மறைவால், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மனு தாக்கல் நேற்று துவங்கியது. தி.மு.க., வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., போட்டியிடும் என்று அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. விழுப்புரம் மாவட்டம் பில்லுாரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் அபிநயா வேட்பாளர் என, சீமான் அறிவித்துள்ளார். அ.தி.மு.க., தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. சீமான் கட்சியின் அபிநயா, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு, 65 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் கிடைத்தன. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர், மருத்துவர் என்பதால் அபிநயாவுக்கு விக்கிரவாண்டியில் இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.அபிநயாவின் கணவர் பொன்னிவளவன் மாட்டு பண்ணை வைத்திருக்கிறார்; விவசாயம் செய்கிறார். அபிநயா நான்கு ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக, உள்ளார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிகளை விட அதிக ஓட்டுக்கள் பெற வேண்டும் என்ற முனைப்பில், அபிநயாவை களமிறக்கி இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். பல தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தை பயன்படுத்திய இக்கட்சிக்கு, லோக்சபா தேர்தலில், 'மைக்' சின்னம் தரப்பட்டது. அதே சின்னத்தில் போட்டியிட அபிநயாவும் ஆர்வமாக உள்ளார்.பிரேமலதாவுக்கு 'சீட்'
லோக்சபா தேர்தலில், சட்டசபை தொகுதி வாரியாக பார்க்கும் போது, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,வை விட, 6,823 ஓட்டுக்களை தி.மு.க., கூடுதலாக பெற்றது. பலமான வேட்பாளரை நிறுத்தினால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும் என, அ.தி.மு.க., தலைமை கணக்கு போடுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவருக்கு தே.மு.தி.க., தரப்பில், 'சீட்' கேட்டனர். ஆனால், பிரேமலதா போட்டியிட்டால் மட்டுமே சீட் தர முடியும்; இல்லை என்றால் நாங்களே போட்டியிடுவோம் என, அ.தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற, தமிழக காங்கிரஸ் சார்பில், 18 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், அழகிரி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர். முதல் நாளில் ஐந்து
மனுத்தாக்கல் முதல் நாளான நேற்று, தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அக்னி ஆழ்வார், 43, மனு தாக்கல் செய்தார். இவர், ரூ.50,000 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தார். கோவை சுந்தராபுரம் நுார்முகமது, 66; மேட்டூர் அணை தேர்தல் மன்னன் பத்மராஜன், 63 ஆகியோரு மனு கொடுத்தனர். திருச்சி, உறையூர் ராஜேந்திரன், 63; ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளை மாலையாக அணிந்து வந்து மனு தாக்கல் செய்தார். நாமக்கல் செல்லம்பட்டி அஹிம்சா சோசலிஸ்ட் கட்சி தலைவர் ரமேஷ், 42, என்பவரும் மனு தாக்கல் செய்தார். ***