சென்னையில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்
சென்னை:சென்னை ஓமந்துாரார் தோட்டம், சிவானந்தா சாலையில், தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியர் கூட்டமைப்பு சார்பில், கிராம சுகாதார செவிலியர்கள் 200க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இது குறித்து, கிராம சுகாதார செவிலியர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 3,800 துணை சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை சுகாதார நிலையங்களில், அனுபவமற்ற தற்காலிக பணியாளர்களை தடுப்பூசி போட சொல்கின்றனர். அதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும். இதன் வாயிலாக, தடுப்பூசி பணியை, தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். மேலும், வசிக்க தகுதியற்ற, புதிதாக கட்டப்பட்ட நலவாழ்வு நிலையங்களுக்கு, வாடகை பிடித்தம் செய்வதை கைவிட்டு, வாடகையற்ற குடியிருப்பாக மாற்ற வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.