வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு தன்னார்வலர்கள் நியமனம்
சென்னை: தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. டிச.,4 வரை இப்பணி நடைபெற உள்ளது. இதற்காக, 68,467 ஓட்டுச் சாவடி அலுவலர்கள், வீடு, வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் திருத்த படிவத்தை வினியோகம் செய்து வருகின்றனர். இவர்களின் பணியை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், 2.11 லட்சம் ஏஜன்டுகளும் கண்காணிக்கின்றனர். கணக்கெடுப்பு படிவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், வாக்காளர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருகின்றனர். எனவே, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும், அலுவலர்களுக்கும், வாக்காளர்களுக்கும் உதவ, தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஓட்டுச்சாவடிக்கு இரண்டு தன்னார்வலர்களை நியமிப்பதற்கான பணியை மேற்கொள்ளும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.