உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை முதலே திரண்ட தொண்டர்கள் சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

காலை முதலே திரண்ட தொண்டர்கள் சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க, தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கார், வேன், பஸ்களில் அதிகாலை முதலே திரண்டனர்.

தேசிய நெடுஞ்சாலை

இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் மார்க்கங்களில், காலை 8:00 மணியில் இருந்து வாகனங்கள் தொடர்ச்சியாக அணிவகுத்தபடி சென்றன. விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இருந்து காலை 10:00 மணி முதல் சித்தணி வரை, 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மாநாட்டுக்கு திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்களை, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ள பார்க்கிங் பகுதிக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல, சென்னை மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்களை சித்தணி, வி.சாலை பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு திருப்பி அனுப்பினர்.அந்த வாகனங்களில் வந்த தொண்டர்கள், மூன்று பிரதான வாயில்கள் வழியாக மாநாட்டின் திடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், தொண்டர்கள் சாரை சாரையாக அணிவகுத்ததால், விக்கிரவாண்டி முதல் சித்தணி வரை பகல் 12:00 மணிக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

அச்சமின்றி பங்கேற்பு

பகல் 12:00 மணி வரை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனங்களை மாற்று சாலையில் திருப்பி விடாததால், சென்னை மற்றும் திருச்சி மார்க்கமாக சென்ற பஸ் உள்ளிட்ட பிற வாகனங்கள், ஊர்ந்து சென்றன. மாநாட்டு திடல் பகுதியை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேலானது.மாநாட்டில் பங்கேற்க, நேற்று மதியம் 2:00 மணி வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்திருந்தனர். இவர்களில், 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்.மேலும், ஏராளமான இளம்பெண்களும் வருகை தந்தனர். பெரும்பாலும் அரசியல் கட்சி மாநாடுகளுக்கு, நெடுந்தொலைவில் இருந்து வாகனங்களில் ஆண்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்த மாநாட்டில், கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், 30 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் அச்சமின்றி பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை