அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட்; அவசியமாகிறது சிறப்பு ரயில்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டு முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை தவிர்க்க சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன் வரவேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் இருந்து தொடர் விடுமுறை, பொங்கல், தீபாவளி விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ரயில்களில் அதிகளவில் பயணிப்பதால் எளிதில் டிக்கெட் கிடைக்காத நிலை தான் எப்போதும் உள்ளது. சிறப்பு ரயில்களை இயக்கினாலும் சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்துவிடும். அக். 20ல் தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயங்கும் வந்தே பாரத், தேஜஸ், குருவாயூர், வைகை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, கொல்லம், நாகர்கோவில், முத்து நகர், அனந்தபுரி, பொதிகை, நெல்லை, சிலம்பு, பாண்டியன் உட்பட அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலையும், சில ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாமலும் பல ஆயிரம் பயணிகள் தவித்து வருகின்றனர். சிறப்பு ரயில்கள் இயக்கினால் கூட உடனடியாக முன்பதிவு முடிந்து விடுகிறது. இதனை தவிர்க்க அக். 16 முதல் 19 வரையில் சென்னையில் இருந்து நாகர்கோவில், செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், போடி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை, சேலம், காட்பாடி, வழியாக கோவை நகரங்களுக்கும், மறு மார்க்கத்தில் சென்னை திரும்ப வசதியாக அக். 20 முதல் 25 வரையில் சிறப்பு ரயில்கள் மற்றும் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் அந்தியோதயா ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.