வீணடிக்கும் உணவுகளும் நாய்கள் அதிகரிக்க காரணம் கால்நடை மருத்துவர் தகவல்
சென்னை:'நாம் வீண் செய்யும் உணவுகள், நாய்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க உதவும் காரணியாக உள்ளது' என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.தெரு நாய்கள் பெருக்கம் பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றுக்கு கருத்தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தாலும், நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெருக்களில் வீசப்படும் உணவு பொருட்களே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, சென்னை, நியூ கார்னர்ஸ்டோன் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை நிறுவனர் ஆர்.சொக்கலிங்கம் கூறியதாவது:ஆண்டுக்கு இருமுறை நாய்கள் குட்டி போடும். அதன் சினை காலம் 63 நாட்கள். மனிதர்களை போல், நாய்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை. வாழ்வியல் முறை கிடையாது. அவற்றுக்கு உணவு இருந்தால் மட்டும் போதும். உணவை பொறுத்து, அவற்றின் இனப்பெருக்கம் இருக்கும். இதில் தெரு நாய், வீட்டு நாய் என பிரித்து பார்க்க முடியாது.வீட்டில் வளர்க்கும் நாய்கள், நாம் உண்ணும் உணவை உட்கொண்டு வாழ்கின்றன. 'பெடிகிரி' உள்ளிட்ட உணவுகளும் பல வீடுகளில் வழங்கப்படுகின்றன. அவற்றில், 'மைக்ரோ மினரல்ஸ்' உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளன. தெரு நாய்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கினாலும், பெரும்பாலும், மனிதர்களால் குப்பையில் வீசப்படும் மீதி உணவுகளையே, அவை உண்டு வளர்கின்றன. நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.சென்னையில் கடந்த 2014ம் ஆண்டில், 82,000 என்ற அடிப்படையில் இருந்த தெரு நாய்கள் எண்ணிக்கை தற்போது 1.81 லட்சமாக அதிகரித்துள்ளன. இதுபோல் மாநிலம் முழுதும் நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாம் வீண் செய்யும் உணவுகள், நாய்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.