உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயல்களில் தண்ணீர்.. விவசாயிகள் கண்ணீர்: நாகையில் 60,000 ஏக்கர் பயிர் அழுகி நாசம்

வயல்களில் தண்ணீர்.. விவசாயிகள் கண்ணீர்: நாகையில் 60,000 ஏக்கர் பயிர் அழுகி நாசம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், கனமழை ஓய்ந்த நிலையில், விளை நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல், 60,000 ஏக்கரில் நெற்பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். நாகை மாவட்டத்தில், 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடந்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக, நாகை மாவட்டம் முழுதும் சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வெள்ளநீரால், வயல்களில் மூழ்கியுள்ளன. விவசாயிகளுக்கு ஆறுதலாக, மிதமான மழை விட்டு விட்டு பெய்தாலும், விளைநிலங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி, 60,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் மூழ்கி, அழுகி வருகிறது. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், வாய்க்கால்களில் தண்ணீர் வடிய முடியாமல் எதிர்த்து திரும்புகிறது. இதனால் ஒரு வாரமாக மூழ்கி கிடக்கும் இளம் பயிர்கள் அழுகி வருவது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடைமடை பாசன விவசாய சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது:

திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கரைபுரண்டோடி வரும் வெள்ள நீரின் வடிகாலாக நாகை உள்ளது. மேல் மாவட்டங்களில் வடிய வைக்கப்படும் வெள்ளநீர், ஆறுகள், பாசன வாய்க்கால்களில் நிரம்பி வழிவதால், நாகை மாவட்ட வயல்களில் நீர் வடிய சில நாட்களாகும். இதனால் இளம் நெற்பயிர்கள் அழுகியுள்ளது. விவசாயிகள் காப்பீடு செய்துள்ள நிலையில், 100 சதவீத பாதிப்பை கணக்கில் கொண்டு, உச்சப்பட்ச தொகையான, 37,600 ரூபாய் வழங்க வேண்டும். கடலில் கலக்கும் ஒவ்வொரு வடிகால் ஆற்றிலும் தடையில்லாமல் தண்ணீர் வடியும் வகையில் முகத்துவாரங்களை துார்வார வேண்டும், ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நீர்வளத்துறையினர் கண்டு கொள்வதில்லை. தேவநதியின் முகத்துவாரத்தில் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்களால் உருவான மணல் திட்டுகளை மழை காலத்திற்கு முன் அப்புறப்படுத்தி, வெள்ளநீர் தடையின்றி கடலில் கலக்க நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை