உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க வரி விதிப்பு தடை கடந்து சாதிக்கலாம்

அமெரிக்க வரி விதிப்பு தடை கடந்து சாதிக்கலாம்

திருப்பூர்; 'அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்ற தடையை கடந்து, நாம் சாதிக்கலாம்' என, இந்திய தொழில் துறை மேம்பாடு மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் மாநில கவுன்சில் இயக்குனர் ஹன்ஸ் ராஜ் வர்மா கூறினார். மாவட்ட தொழில் மையம் சார்பில், மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவது குறித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஹன்ஸ் ராஜ் வர்மா பேசியதாவது: தமிழக பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை அடைய வேண்டும் என்பது முதல்வரின் லட்சியம். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் நகராகவும், வளர்ச்சி பெறும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. தமிழக முன்மாதிரி மாடல்களை, பிற மாநிலங்கள் பின்பற்ற துவங்கியுள்ளன. இந்திய பொருட்கள் மீது, அமெரிக்கா, 50 சதவீதம் வரி விதித்துள்ளது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துறை போன்று, நாடு முழுவதும், 200க்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் உள்ளன. உலகில், மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப, நம்மை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். மாற்றங்களை பார்த்து பயப்பட தேவையில்லை; மாற்றங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க சிறிது காலம் ஆகலாம். தவறில்லை. நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து, ஆராயவேண்டும். நிச்சயம் தடைகளை கடந்து வெற்றி பெற்றுவிடலாம். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி