சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மத்திய மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். தென்மேற்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகள், அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசலாம் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.