சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், தமிழகத்தில் பல மாவட்டங்களில், அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம். இது, அதற்கடுத்த இரண்டு நாட்களில், தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதே சமயத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகளை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த அமைப்புகள் காரணமாக, தமிழகத்தில் அடுத்து வரும் ஆறு நாட்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.11ல் கனமழை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை மறுதினம் கனமழை பெய்யலாம். வரும் 12ல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யலாம் என்பதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 13, 14ம் தேதிகளில் திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில்... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.