திருப்பூர் : எடை குறைவாக பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க, ரேஷன் கடைகளில் விரைவில் புதிய வகை தராசுகள் பயன்படுத்தப்பட உள்ளன.ரேஷன் கடைகளில், புளூடூத், யு.எஸ்.பி., கேபிள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியுடன் இணைத்து பயன்படுத்தும் வகையிலான புதிய எலக்ட்ரானிக் தராசுகள், அளவைக்கு விரைவில் பயன்படுத்தப்பட உள்ளன.இதுபற்றி, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் விற்பனையாளர், கார்டுதாரருக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் அவற்றின் எடை அளவுகளை, 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. புதிய தராசில் வைக்கப்படும் பொருளின் எடை, தானியங்கி தொழில்நுட்பத்தில், 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிக்கு அனுப்பப்பட்டு பதிவு செய்யப்படும். இதற்காக, 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியிலும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. விற்பனையாளர், பொருட்களின் எடையை சுயமாக உள்ளீடு செய்ய முடியாது. 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில், 'அரிசி, துவரம் பருப்பு' என, உணவு பொருட்களின் பெயரை மட்டும் ஒவ்வொன்றாக தேர்வு செய்வார். அளவையாளர், தராசில் எவ்வளவு எடைக்கு பொருள் வைக்கிறாரோ, அந்த எடையளவு உடனுக்குடன், 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டு கார்டுதாரருக்கு ரசீதாக வழங்கப்படும்.கார்டுதாரருக்கு எடை குறைவாக பொருள் வழங்கிவிட்டு, கூடுதலாக வழங்கியதாக பதிவு செய்ய முடியாது. இதனால், ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும்.அனைத்து மாவட்டங்களிலும், இரண்டு ரேஷன் கடைகள் வீதம் இதற்கான சோதனை நடத்தப்பட்டு, வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. கூட்டுறவுத்துறை வாயிலாக, புதிய தராசுகள் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.