சென்னை: அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு, ''அரசியலில் ஆயிரம் நடக்கும்; அந்தரங்கத்தில் நடப்பதை வெளியே சொல்ல முடியாது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், சென்னை காசிமேடு கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறிது துாரம் 'பைபர்' படகை ஓட்டிச் சென்ற ஜெயகுமார், கடலில் பால் ஊற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டியை பார்த்தேன். அவர் மன வேதனையுடன் பேசியுள்ளார். அவர் விடுத்துள்ள சாபம், தி.மு.க.,விற்கே முழுமையாக பொருந்தும். பிரேமலதாவின் சாபம், தி.மு.க.,வை சும்மா விடாது. 'அ.தி.மு .க.,வின் முதலாளி அமித் ஷா' என தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க.,வுக்கு எப்போதும் எம்.ஜி.ஆர்., தான் முதலாளி. ஆட்சி முடியப் போகும் நேரத்தில், ஓட்டளிக்கும் வயதை மனதில் கொண்டு, கல்லுாரி மா ணவர்களுக்கு 'லேப்-டாப்' கொடுக்கின்றனர். கள்ளக்குறிச்சி சாராய சம்பவத்தில் பலர் உயிரிழந்தபோது, அங்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நெருங்குவதால் இப்போது அங்கு சென்றுள்ளார். தெனாலி திரைப் படத்தில் வரும் கமலைப் போல், எதை பார்த்தாலும் பயப்படுவது போல் உள்ளது ஸ்டாலினின் நிலை. 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அவர் தன் கருத்தை கூறியுள்ளார். அவரை மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைப்பது குறித்து, கட்சி தலைமை முடிவெடுக்கும். அரசியலில் ஆயிரம் இருக்கும்; நான்கு சுவருக்குள் நான்கு விஷயம் நடக்கும். அதை எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது சொல்வோம்; அந்தரங்கத்தில் நடப்பதை வெளியே சொல்ல முடியாது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு, இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ளது. உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.