உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சஸ்பெண்ட் சார் பதிவாளர்களுக்கு மீண்டும் பதவி தருவது எப்போது?

சஸ்பெண்ட் சார் பதிவாளர்களுக்கு மீண்டும் பதவி தருவது எப்போது?

சென்னை:பதிவுத்துறையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாத சார் பதிவாளர்களை, மீண்டும் பணியில் சேர்ப்பதில், மேலதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ரொக்க பரிமாற்றங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், லஞ்ச புகார் எழுகிறது.இதன் அடிப்படையில், 2021ல் புதிய அரசு பதவிக்கு வந்தவுடன், பதிவுத்துறை அமைச்சர், செயலர், ஐ,ஜி., ஆகியோர், நேரடியாக சார் பதிவாளர் அலுவலகங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், திடீர் சோதனைகள் மேற்கொண்டனர்.இதில், 100க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள், லஞ்சம் வாங்கியது, வருவாய் இழப்பு ஏற்படுத்தியது போன்ற புகார்களில் சிக்கினர். இவர்களை, நிர்வாக நடவடிக்கை என்ற அடிப்படையில், பதிவுத்துறை தலைவர் தற்காலிக பணி நீக்கம் செய்தார்.இது குறித்து சார் பதிவாளர்கள் கூறியதாவது:தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர்களில், 50க்கும் மேற்பட்டோர் மீதான வழக்கு விசாரணை முடிந்துள்ளது. இதில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாத சார் பதிவாளர்களை, மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.இது குறித்து, பல்வேறு வழிகளில், பதிவுத்துறையில் மனு அளித்து இருக்கிறோம். ஆனால், பதிவுத்துறை அமைச்சர் நிலையில், இதற்கு எவ்வித முட்டுக்கட்டையும் இல்லாத நிலையில், மேலதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாத நிலையில், தகுதியான நபர்களை பணியில் சேர்க்காமல், விசாரணை முடியாத நிலையில் உள்ள சிலரை பணியில் சேர்த்து, பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.சட்டப்படி தகுதி பெறும் நபர்களை ஓரம்கட்டிவிட்டு, குறிப்பிட்ட சிலருக்கு ஐ.ஜி., சலுகை காட்டுவது குறித்து மேலிடத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ