உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்

திண்டிவனம்: ''தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தியது யார் என இரு தினங்களுக்குள் அம்பலத்திற்கு வரும்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். தைலாபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நீர்வளத்துறை வசம் உள்ள 90 அணைகள், போதிய பராமிப்பின்றி உள்ளதால், மழைப்பொழிவின் போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷட்டர்கள், பாசன கட்டமைப்புகளை சீரமைக்க, நீர்வளத் துறைக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். அரசு சார்பில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்துவது நல்ல விஷயம்; ஆனால், 6 மாதத்திற்கு முன் நடத்திஇருக்கலாம். இதேபோல 'அதிகாரிகளுடன் நாங்கள்' என்ற முகாமை, அரசு நடத்த வேண்டும். அப்போது தான் அதிகாரிகளுடன் மக்கள் அன்றாடம் அடையும் துயரங்கள் வெளிச்சத்திற்கு வரும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது, முகாமில் அதிகரித்து வரும் மனுக்களை பார்த்தாலே தெரியும். முகாமில் நான்கு ஆண்டுகளாக தீராத பிரச்னை, நான்கு மணி நேரத்தில் தீர்ந்து விட்டதாக, ஒரு பெண்மணி கூறிஇருக்கிறார். இதில் என்ன பெருமை; சிறுமை தான். பா.ம.க., பொதுக்குழு கூட்டம், தற்போது ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மட்டும் நடைபெறுகிறது. பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணி வரலாம். மாநாட்டு பிரசுரத்தில் அவரது படத்தை போடுவோம். வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரும் ஆர்ப்பாட்டத்தில், நான் பங்கேற்பது குறித்து விரைவில் சொல்வேன். தைலாபுரத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தவர்கள், சார்ஜ் செய்தவர்கள், வைக்க சொன்னவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இரண்டு நாட்களுக்குள் இதன் முடிவுகள் அம்பலத்துக்கு வரும். ஒட்டு கேட்கும் கருவி குறித்து போலீசார், முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சைபர் க்ரைம் போலீஸ் தமிழகத்தில் இருக்கிறதா? சைபர் க்ரைம் போலீசார், சைபராகி; கடைசியில் மைனசாக போய் விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ரங்ஸ்
ஜூலை 19, 2025 13:35

சுயநலவாதிகள். தான், தன் குடும்பம் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு? என்று கூறி கட்சி நடத்துபவர்களால் மற்றவர்களுக்கு உபயோகமில்லை. ஒட்டு கேட்டாலென்ன கேட்காவிட்டாலென்ன நாட்டுக்கு இழப்பு ஏதும் இல்லை.


ஜூலை 18, 2025 07:49

நாட்டில் என்ன கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன .. சிறுமியை கற்பழிதிருக்கிறர்கள் கனவிலும் கண்டிராத கொடூரங்கள் நடக்கிற்றன ..அதைப்பற்றி ஒரு கண்டனம் இல்லை ..இப்போ ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது முக்கியமா ?..


புதிய வீடியோ