டாஸ்மாக் முறைகேட்டில் யார் அந்த தம்பி? தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., நெருக்கடி
மதுரை : தமிழக டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணையில் இருந்து தப்பிய தொழிலதிபர் ரத்தீஷை, 'யார் அந்த தம்பி?' என கேள்வி கேட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக அடுத்த பிரசாரத்தை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து, தி.மு.க., அனுதாபியாக இருந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். மாணவியை அவர் மிரட்டும் போது, 'சார்' என குறிப்பிட்டு ஒருவருக்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியானது. இதை வைத்து, தி.மு.க.,வை மிகக் கடுமையாக விமர்சித்து, 'யார் அந்த சார்?' என கேள்வி எழுப்பி, தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் பல்வேறு வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்; இதே பிரச்னையை சட்டசபையிலும் எழுப்பி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில், டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக மேலாண் இயக்குநர் விசாகனிடம், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரைத் தொடர்ந்து, தி.மு.க.,வுடன் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் என்பவரையும் அமலாக்கத் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்ற அமலாக்கத் துறையினர், அவர் அங்கு இல்லாததால், வீட்டை பூட்டி 'சீல்' வைத்துள்ளனர்.தற்போது இந்தப் பிரச்னையை, தி.மு.க.,வுக்கு எதிராக அ.தி.மு.க., கையில் எடுத்துள்ளது.தி.மு.க.,வின் மிக முக்கிய பிரமுகருக்கு நெருக்கமானவராக இருந்து ரத்தீஷ் செயல்பட்டவர் என்பதால், 'யார் அந்த தம்பி?' என்ற கேள்வியுடன், மக்களிடம் அ.தி.மு.க., பிரசாரம் செய்யத் துவங்கி உள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலர் ராஜ்சத்யன் கூறியதாவது: அண்ணா பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரனை வைத்து, ஏற்கனவே அ.தி.மு.க., சார்பில் 'யார் அந்த சார்?' என, போஸ்டர் பிரசாரம் செய்தோம். டிஜிட்டலாகவும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டோம். அதேபோல, இப்போது ரத்தீஷ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளோம். போஸ்டர் பிரசாரம் துவங்கியுள்ளது. டிஜிட்டல் பிரசாரமும் வேகமெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.