திருநெல்வேலி: “சபாநாயகர் அப்பாவு நிலம் இருப்பதால், மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு தடை விதித்துள்ளனர்,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் நேற்று முன்தினம், 'கடலம்மா மாநாடு' நடத்திய சீமான், நேற்று பணகுடி மலைப்பகுதியில் மேய்ச்சல் நில உரிமைக்காக, 'மாடு மேய்க்கும் போராட்டம்' நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், சீமான் போராட்டம் நடத்த முடியவில்லை. இந்நிலையில் திருநெல்வேலியில் சீமான் அளித்த பேட்டி: மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது. சபாநாயகர் அப்பாவுவிற்கு அங்கு நிலம் உள்ளது. அதனால் தான் பணகுடி செல்ல எனக்கு அனுமதி மறுத்துள்ளனர். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பால் தேவையை ஆந்திரா பூர்த்தி செய்கிறது. ஆனால், அங்கிருந்து வரும் பால் துாய்மையானதா என்ற கேள்வி எழுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தால், சிங்காரச் சென்னை இல்லை; துாண் சென்னை தான் உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள், மறைமுகமாக மக்களுக்கு பணம் கொடுப்பதாகும். பீஹாரில், பெண்களு க் கு 10,000 ரூபாய் கொடுத்து பா.ஜ., வெற்றி பெற்றது போல, தமிழகத்தில் பொங்கலுக்கு 3,000 அல்லது 5,000 ரூபாய் கொடுப் பர். ஆனால், தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தி.மு.க.,விற்கு மாற்று அ.தி.மு.க., அல்ல. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் இடையே எந்த கொள்கை வேறுபாடும் இல்லை. 'பாட்டிலுக்கு 10 ரூபாய்' என பாடும் விஜய் கூட, தான் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.