வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை இபிஎஸ் பேசாதது ஏன்: கேட்கிறார் துரைமுருகன்!
சென்னை: ''வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை இபிஎஸ் வாய் திறக்காதது ஏன்,'' என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை; கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜ தனது வெற்றியைச் சாத்தியப்படுத்தியதை லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல், ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள், தேர்தல் ஆணையம் பாஜ அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே பேராபத்து!மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வென்றதற்குக் காரணமே போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான். கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 41 லட்சம் வாக்காளர்களால் தேர்தல் முடிவே மாறிப் போனது. லோக் சபா தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டுச் செய்த சதித்திட்டத்தால் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. இதே பாணியில்தான் வரப் போகிற பீஹார் சட்டசபை தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜ முயல்கிறது. SIR என்ற சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழகத்திலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழகத்தில் சேர்க்கும் சதி திட்டத்தையும் பாஜ அரசு மேற்கொள்ளக் கூடும் . இது தமிழகத்தின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல்.நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழக மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி. அதிமுகவை அடமானம் வைத்தவர், தமிழக வாக்காளர்களையும் டில்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?தமிழகத்தில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.