உலக தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 10 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது' என, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி குற்றம் சாட்டி இருக்கிறார்.கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு இருந்த நிலையையும், நாட்டு மக்கள் வாழ்ந்த காலத்தையும் சற்று பின்னோக்கி பார்த்தோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு எவ்வளவு சுபிட்சமாக, தன்னிறைவு பெற்று, எவ்வித குறையும் இல்லாமல் இருந்தது?கங்கையிலும், காவிரியிலும் தண்ணீரா ஓடியது? தேனும், பாலும் அல்லவா கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, சுபிட்சமாக, கடனோ, உடனோ இன்றி அவரவர் சொந்த வீடுகளில் வாழ்ந்தனர். வேலை இல்லாத ஒரு இளைஞனை கூட காண முடியாதே.பொருளாதாரத்தில் நாடு எவ்வளவு தன்னிறைவு பெற்று விளங்கிக் கொண்டிருந்தது. அதன் விளைவு? உலக வங்கியும், சர்வதேச நிதியமும் நம்மிடம் கடன் வாங்க, காத்து கிடந்தன.வெளிநாடுகளுக்கும், உலக வங்கிக்கும் கடன் வழங்கியது போக, மீதி இருந்த நிதியை, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற உள்ளூர் பிரமுகர்களுக்கும் கடன்களாக வாரி வழங்கி, அவர்கள் வெளிநாட்டுக்கும் தப்பியோட வழி வகுத்து கொடுத்த ஆட்சி அல்லவா.காங்., ஆட்சியின் ஊழல்களை போபர்ஸ், டெலிகாம், 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, சர்க்கரை, நிலக்கரி என, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாமே.ஆனால், இந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் ஒரு ஊழல் புகாரை அழகிரியால் சுட்டிக்காட்ட முடியுமா? இந்த, 100 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு வாங்கியிருந்தாலும், 10 ஆண்டுகளில் நம் பொருளாதாரம் அதை விட, பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்திருப்பதை கவனிக்க தவறியதேன்?என்னமோ, இந்த 100 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அவர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றதை போல அழகிரி பேசுகிறாரே... 10 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சியை பார்க்காமல், பா.ஜ.,வை குறை சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காகவே, அழகிரியின் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.