சென்னை : வடபழனியில், கணவனை கூலிப்படை வைத்து, மனைவி கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் புரோக்கரான சம்பத் மற்றும் எலெக்ட்ரீஷியன் உட்பட மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை, வடபழனி, வ.உ.சி., முதல் குறுக்குத் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரசன்னா, 42, உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். இவரது மனைவி, உமா மகேஷ்வரி, 40. இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஆகாஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளன. முன்னதாக, கோழிக்கடை வியாபாரம் செய்த போது ஏற்பட்ட நஷ்டத்தால், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, தொடர்ந்து, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, மனைவிக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது என பிரசன்னா இருந்துள்ளார். அத்துடன், பூர்வீகச் சொத்து, குடும்பச் சொத்து என ஆறு கோடி சொத்துக்களை பிரசன்னா அழித்துள்ளார். இதில், விரக்தியான உமா, கணவர் பிரசன்னாவை கொலை செய்துவிட தீர்மானித்து, குடும்ப நண்பரான சம்பத் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
நேற்று முன்தினம் அதிகாலை, சம்பத் உள்ளிட்டோர், பிரசன்னாவின் வீட்டிற்கு வந்து அவரை அடித்து, குடியிருப்பில் உள்ள மின்வாரிய மீட்டர் பாக்சில் இருந்து, ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து கொன்று விட்டு சென்றனர். அதன்பின், கவுன்சிலர் புஷ்பரூத் உதவியுடன், வடபழனி போலீசில் உமா சரணடைந்தார். கூலிப்படையைச் சேர்ந்த சம்பத் உள்ளிட்டோரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில், தனிப்படையினர் சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேற்று காலை 7 மணிக்கு தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிக்க முயன்ற பெருங்களத்தூர், சதானந்தபுரம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சம்பத், 44, கிழக்கு தாம்பரம், கண்ணகி நகர், பாரதிதாசன் தெரு, ராமகிருஷணாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நந்தகுமார் (எ) அப்பு, 27 மற்றும் பெருங்களத்தூர், பாரதி தெருவைச் சேர்ந்த அம்மு(எ) கோவிந்தராஜ், 34 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், உமா கூறியபடி, சம்பவத்தன்று பிரசன்னாவை அடித்து அவர் மயங்கியதும், வெளியில் கொண்டுவந்து மீட்டர் பாக்சில் இருந்து ஒயர் எடுத்து பிரசன்னாவின் காதில், பொருத்தி அவரை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டனர். கொலையாளிகள் மூவரில் நந்தகுமார், எலெக்ட்ரீஷியனாக இருந்ததால், இலகுவாக, தங்கள் இலக்கை முடித்ததாக கூறினர். தொடர்ந்து, தாங்கள் பிரசன்னாவை கொலை செய்தது எப்படி என்பதை, போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள், கொலையாளிகளை பிடித்த, தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
தூக்கில் தொங்கவிட முடிவா? பிரசன்னாவை கொல்வதற்காக வந்த மூவரும் முதலில், உமாவை வீட்டை விட்டு வெளியில் வரச் சொல்லிவிட்டு, உள்ளே நுழைந்து மதுபோதையில் கிடந்த பிரசன்னாவை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன்பின், அவரை தூக்கி வந்து, வீட்டு ஹாலில் கிடத்தி, அங்கு,' பேன்' கொக்கியில் சேலை ஒன்றை போட்டு அதில், தூக்கில் தொங்கவிட முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதிகளவு எடையுடன் இருந்த பிரசன்னாவை தொங்க விட முடியாததால், எலெக்ட்ரீஷியன் நந்தகுமார் மூலம் மின்சார ஷாக் கொடுத்து, கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.