காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளூர் மக்கள் திண்டாட்டம்
மூணாறு : மூணாறில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் திண்டாடி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் அடைந்து வருகின்றனர்.மூணாறு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். ஆனால் காட்டு யானைகளை பார்க்க சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் படையெடுத்து வருகின்றனர்.மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் இயற்கையான சுற்றுச் சூழலில் ஆனக்குளம் பகுதி உள்ளது. அங்குள்ள ஆற்றில் நீர் அருந்த காட்டு யானைகள் மாலை வேளைகளில் கூட்டமாக வந்து செல்லும்.அதுவும் கோடை காலம் துவங்கி விட்டால் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட யானைகள் நீர் அருந்த வரும். அவை நீர் அருந்தி விட்டு குளியலிடும். அதனை பார்க்க சுற்றுலா பயணிகள் நாள் முழுவதும் ஆற்றின் கரையோரம் காத்திருப்பர். தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் தினமும் ஏராளமான யானைகள் வந்து செல்கின்றன. அவற்றை பார்த்து பயணிகள் கொண்டாட்டம் அடைந்து வருகின்றனர். பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.