உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு தந்த ரூ.444 கோடி சும்மா கிடக்குது ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமையுமா?

மத்திய அரசு தந்த ரூ.444 கோடி சும்மா கிடக்குது ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமையுமா?

சென்னை:ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கிய போதிலும், மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தராததால், பல ஆண்டுகளாக ரயில் பாதை பணி முடங்கி உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்துக்காக, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில், பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு, 1914 பிப்., 24ல் மெயில் ரயில் சேவை துவக்கப்பட்டது.

அழிந்தது

தனுஷ்கோடி 100 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் தென்கடலோர வணிக மையமாக திகழ்ந்ததாக கூறப்படுகிறது.கடந்த 1964 டிச., 22ம் தேதி தாக்கிய புயலில், தனுஷ்கோடி ரயில் பாதை முற்றிலும் அழிந்தது. புயல் தாக்கி, 55 ஆண்டுகள் கழிந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு புது ரயில் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.இத்திட்டத்துக்கு பிரதமர் மோடி, 2019 மார்ச் 1ம் தேதி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். திட்ட மதிப்பீடு மொத்தம் 733 கோடி ரூபாய். பிரதமர் மோடி துவக்கி வைத்த இத்திட்டத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 444 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திட்டப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் என, தினமும் ஒரு லட்சம் பேர் வரை தனுஷ்கோடி வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் மண்டபம் வரை ரயிலில் வரும் பொது மக்கள், அங்கிருந்து சாலை மார்க்கமாக கார்களிலும், வேன்களிலும் செல்கின்றனர்; ராமேஸ்வரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை வரை சுற்றி பார்க்கின்றனர். ஆனாலும், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

நெரிசல்

இதுகுறித்து, சுற்றுலா பயணியர் கூறியதாவது: ராமேஸ்வரம் புனித தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள கோவிலில் தரிசனம் செய்யவும், அருகில் தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரை சாலை வழியாக இருபுறமும் கடல் அழகை காணவும் மக்கள் வருகின்றனர். ஆனாலும், இங்கு போதிய சாலை வசதி இல்லாததால், நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. அதேபோல, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதையை மீண்டும் அமைத்தால், இங்கு வரும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நிலம் ஒதுக்காததே பிரச்னைதெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, மத்திய ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது. சரக்கு போக்குவரத்து வசதி இல்லாதபோதிலும், பயணியர் வசதி மற்றும் நாட்டின் முக்கிய எல்லையாக இருப்பதால், ரயில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில், தனி கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு, 70.67 ஏக்கர் வனத்துறை நிலம், 108.25 ஏக்கர் மாநில அரசுக்கு சொந்தமான நிலம், 9.04 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். மாநில அரசு வாயிலாக தான், இந்த நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும். இந்த திட்டத்திற்காக ரயில்வே இதுவரை, 444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதனால், இந்த திட்டப் பணிகள் எந்த முன்னேற்றமும் இன்றி இருக்கின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. நிலம் கையகப்படுத்தி தந்தால், பணிகளை துவக்க ரயில்வே தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை