பசுமை ஆடைகளை அடையாளப்படுத்த குறியீடு வேண்டும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திருப்பூர்:பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், திருப்பூர் கிளஸ்டர், 'கிரீன் திருப்பூர்' என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. மரம் வளர்ப்பு, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி, மறுசுழற்சி தொழில்நுட்பம் என முன்னோடியாக இருக்கிறது. இருப்பினும் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் ஆடைகளில், பசுமை சார் உற்பத்தி ஆடைகள் என்பதை பிரத்யேகமாக காட்சிப்படுத்த இயலவில்லை. காத்திருப்பு
ஒவ்வொரு வகை ஆடைகளுக்கும், மத்திய அரசு பிரத்யேக ஏற்றுமதி வர்த்தக குறியீடு எண் வழங்கியுள்ளது. மத்திய அரசு, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பசுமை ஆடைகளுக்கான புதிய வர்த்தக குறியீட்டை அறிவிப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்புடன், திருப்பூர் ஏற்றுமதியாளர் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலர் குமார் துரைசாமி கூறியதாவது:வட்டி சமன்படுத்தும் திட்டத்தை, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; அதிகபட்ச வட்டி மானியம், 50 லட்சம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். பின்னலாடை தொழிற்சாலைகள், 10 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்ப இயந்திர இறக்குமதி செய்யாமல் இருக்கின்றன.மத்திய அரசு, 'டப்' போன்ற, இயந்திர இறக்குமதிக்கு மானியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். இறக்குமதி
பஞ்சு மீதான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதியை எளிதாக்க வேண்டும்.வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்ற அடிப்படையில் உற்பத்தியாகும் பசுமை ஆடைகளை, பிரத்யேகமாக அடையாளப்படுத்த வேண்டும். அதற்கான பிரத்யேக வர்த்தக குறியீட்டு எண் வழங்கும் அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றால், பசுமை சார் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்க இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.