உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்

மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்

ஜூலை 1 ம் தேதி டாக்டர்கள் தினத்தையொட்டி மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை; தகுதிக்கேற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் இங்கு நீண்டகாலமாகவே போராடி வருகிறோம். அதுவும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதியக் கோரிக்கைக்காக அரசு மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார். இருப்பினும் அரசாங்கத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை.சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பது தான் வருத்தமான உண்மை.

உறுதி அளித்த முதல்வர் மறந்தார்

2019 ம் ஆண்டு நடந்த டாக்டர்கள் போராட்டத்தின் போது, எதிர்கட்சி தலைவராக இருந்த நம்முடைய முதல்வர், நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.ஆனால் இன்று வரை கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்ற ஏமாற்றமும், வலியும், வேதனையும் ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் வேறுவழியின்றி எத்தனையோ போராட்டங்களை நடத்திய மருத்துவர்கள், சமீபத்தில் கால் வலிக்க கொப்பளத்துடன் நீண்ட தூரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டோம். அப்போது கூட பாதயாத்திரையாக வந்த மருத்துவர்களை கைது செய்தார்களே தவிர, கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

4 ஆண்டுகள் கடந்து போச்சு

முதல்வர் அவர்களே! அரசு மருத்துவர்களாகிய நாங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இல்லை திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புது பொலிவுடன் அரசு மருத்துவமனைகள் நிறைய திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சிக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், இருக்கின்ற அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை தரம் உயர்த்தும் வகையில் குறிப்பாக போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டுகிறோம். திமுக ஆட்சி அமைந்த பிறகு 4 மருத்துவர் தினங்களை பார்த்து விட்டோம். மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அரசு எதையுமே செய்யவில்லை. எனவே வருகின்ற ஜூலை 1 மருத்துவர் தினத்தை கடைசி வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வரை வேண்டுகிறோம்.வருகின்ற ஜூலை 1 ம் தேதி டாக்டர்கள் தினம் அரசு மருத்துவர்கள் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இருக்கும் வகையில், அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற மாபெரும் அறிவிப்பை வெளியிட, தமிழக முதல்வரை வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tamil Mozhi
ஜூன் 30, 2025 20:58

வாய்ப்பே இல்லை


spr
ஜூன் 30, 2025 19:57

"இருக்கின்ற அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை தரம் உயர்த்தும் வகையில் குறிப்பாக போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுகிறோம்" நல்ல கோரிக்கையே அரசு மருத்துவமணிகளைத் தரமுயர்த்தி அதனைத் தனியொருவராக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக குறைந்த கட்டணத்தில் ஒப்பந்தம் செய்யலாம் அங்குள்ள மருத்துவ உபகரணங்களை அவர்கள் குறைந்த கட்டணத்தில், அரசு தரும் மருத்துவக் காப்பீட்டின் அடிப்படையில் பயன்படுத்த வழி வகுக்கலாம் பராமரிப்பு நிர்வாகம் பாதுகாப்பு, கணிணி வழி பதிவு செய்தல், மருந்தாக அமைப்பு என இவற்றை அரசே ஏற்கலாம் இதனால் பெரும் மருத்துவ மனைகள் கொள்ளையடிப்பது குறையும் அரசு செய்யுமா சென்னை வைணவக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அமைப்பு சிறப்பாக குறைந்த கட்டணத்தில் நல்ல மருத்துவர்கள் பங்கேற்புடன் நடக்கிறது அது போன்ற அமைப்புக்களை உதவிக்கு அழைக்கலாம்


புதிய வீடியோ