தகவல் அறியும் உரிமை சட்டமான, ஆர்.டி.ஐ., இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓ.டி.பி., நடைமுறையால், பயனாளர்கள் தங்கள் கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் - எஸ்.ஆர்.எம்.யூ., உதவி கோட்ட செயலர் ராம்குமார் கூறியதாவது: ஆர்.டி.ஐ., சட்டமானது, அரசின் பல்வேறு துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கொண்டு வரப்பட்டது. பணியாளர், பயிற்சி துறையின் கீழ் செயல்படும் இச்சட்டம், பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.இதன் வாயிலாக அரசிடம் தகவல் பெற விரும்புவோர், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறை தலைமைக்கு கேள்விகளை அனுப்பினால், 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்.இணையதளத்தில் பதிவு எண், மொபைல் போன் எண் போன்றவற்றை உள்ளீடு செய்து, கேள்விகளின் நிலை, பதில் போன்றவற்றை அறியலாம். இந்தாண்டு முதல் ஆர்.டி.ஐ., இணையதளத்தில், இ - மெயில் முகவரி வாயிலாக, ஓ.டி.பி., பெறும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கி உள்ளிட்ட மற்ற துறைகளில், போனில் ஓ.டி.பி., பெறும் வசதி உண்டு. அவை உடனே வந்து விடும்; தாமதமானாலும் குறிப்பிட்ட நொடிகள் கழித்து மறுபடியும் ஓ.டி.பி., பெறும் வசதி கிடைக்கும். தற்போது ஆர்.டி.ஐ., தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முறையில், இ - மெயில் முகவரிக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படுகிறது. ஆனால், எப்போது வரும் எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை.இ - மெயில் முகவரியை பார்த்தால், எந்த ஒரு ஓ.டி.பி., யும் வரவில்லை. நாம் கேட்ட கேள்விகளின் நிலை என்ன என்பது குறித்த எந்த ஒரு தகவலும் தெரியாமலேயே போவதாலும், இ - மெயில் முகவரி இருப்பவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்பதாலும், இச்சட்டம் நீர்த்துப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -