| ADDED : டிச 30, 2025 06:36 AM
சென்னை: பிரதமரின் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக, 2.05 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் மற்றும் அவரின் கூட்டாளிகளை, போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கூட்டாளிகளான ராஜேஸ்வரி, உதயகுமார், பவித்ரா உள்ளிட்ட ஐந்து பேருடன் சேர்ந்து, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள், துளசி, ராமு உட்பட 51 பேரிடம், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக, 2.05 கோடி ரூபாய் வாங்கி, ராஜலட்சுமி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, புதுவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். இப்புகார் மனு, மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வடசென்னை பகுதியில் காலியாக உள்ள வீடுகளை காட்டி, அந்த வீடுகளில் குடியேறும் விதமாக பால் காய்ச்ச வைத்து, பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ராஜலட்சுமி மற்றும் அவரின் கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும், அவர்களுக்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாவியை தந்து உதவிய நபர்களையும், போலீசார் தேடி வருகின்றனர்.