சென்னை : தமிழக சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கான பட்ஜெட் என்பதால், சரமாரி சலுகைகள் அறிவிக்கப்படலாம். குறிப்பாக, பெண்களுக்கு அரசு தரும் மாதாந்திர உரிமைத்தொகை 1,000 ரூபாய் என்பது, 2,500 ரூபாயாக உயர்த்தப்படலாம்; அதேபோன்று, ஆண்களுக்கான நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே, பட்ஜெட் அறிவிப்புகளை, மாநிலம் முழுதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, அரசு ஏற்பாடு செய்துள்ளது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தியாகராஜன், 2021 ஆக., 13ம் தேதி, 2021 - 22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்பார்ப்பு
அடுத்த ஆண்டு சட்டசபையில், முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2022 - 23ம் ஆண்டு மற்றும் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டு, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். அவர், 2024 - 25ம் ஆண்டு, தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் தன் இரண்டாவது பட்ஜெட்டை, அவர் தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது; இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் முடியும். தேர்தலுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்ற பின், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.எனவே, இன்று தாக்கலாகும் முழு பட்ஜெட்டில், மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதில், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என, துணை முதல்வர் உதயநிதி உறுதி அளித்துள்ளார். அதற்கான அறிவிப்பு, இன்றைய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், 'புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை, அடுத்த நிதியாண்டு முதல் 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை
அதை பின்பற்றி, தமிழக அரசும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச பஸ் பயணம், மாதாந்திர உரிமைத் தொகை என மகளிருக்கு சலுகைகள் வழங்கப்படுவது போல், இந்த பட்ஜெட்டில் ஆண்களுக்கான நலத்திட்ட உதவியை, முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; சரண் விடுப்புக்கு பணம் வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளன.எனவே, அவர்களை அமைதிப்படுத்தும் வகையிலான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு துறையும்,புதிய திட்டங்களை செயல்படுத்த, கூடுதல் நிதியை எதிர்பார்க்கின்றன. நிதிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், அதை சமாளிக்க அரசு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது என்பதும், இந்த பட்ஜெட்டில் தெரிய வரும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 2025 மார்ச் 31ம் தேதி, நிலுவையில் உள்ள கடன், 8.33 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அளவுக்குள் கடன் உள்ளதா அல்லது கூடியிருக்கிறதா என்பது இன்று தெரியும். அதேபோல், கடந்த பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, 49,278.73 கோடி ரூபாய். இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை குறையும் என, கடந்த ஆண்டு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. அது சரியாக இருக்குமா அல்லது கூடியிருக்கிறதா என்பதும் இன்று தெரிய வரும்.மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் குறைவிருக்காது என கூறப்படுகிறது. நாளை, வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இன்றைய பட்ஜெட், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில், தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அமையும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.936 இடங்களில் ஒளிபரப்புதமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, ரயில், பஸ் நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அதன்படி, சென்னை மாநகராட்சியில் 100 இடங்கள்; மற்ற 24 மாநகராட்சிகளில் 48 இடங்கள்; 137 நகராட்சிகளில் 274 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதை தவிர, மாநிலம் முழுதும் 425 பேரூராட்சிகள் என, மொத்தம் 936 இடங்களில் இன்று காலை 9:30 மணி முதல், எல்.இ.டி., திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், நாளை தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் உரையும், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.
'லோகோ' வெளியீடு
தமிழக அரசு சார்பில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான 'லோகோ'வை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், '2025 - 26 தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை - எல்லார்க்கும் எல்லாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூபாயை குறிப்பிடும் இலச்சினைக்கு பதிலாக, தமிழில் 'ரூ' என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது.