தரமான உணவுக்கு செலவாகும் மகளிர் உரிமை தொகை
சென்னை:மகளிர் உரிமை தொகையில் குறிப்பிட்ட பகுதி, தரமான உணவு பொருட்கள் வாங்குவதற்கு செலவிடப்படுவதாக, மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டம், 'நான் முதல்வன்' திட்டம், தமிழகத்தில் புத்தொழில் துவக்கத்திற்கான வாய்ப்புகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி கொள்கை, ஒருங்கிணைந்த நகர மேம்பாட்டு கொள்கை தொடர்பாக, மாநில திட்ட குழுவால் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலினிடம், துணை முதல்வர் உதயநிதி, திட்ட குழு செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் நேற்று வழங்கினர். அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது: மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக, கிராமம் மற்றும் நகரங்களில், 10,311 குடும்பங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாடு மிகவும் பின்தங்கிய பிரிவினரை சென்றடைந்துள்ளது. இந்த தொகையை, பயனாளிகள் பெரும்பாலும் மருத்துவ செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துகின்றனர். அதில், குறிப்பிட்ட பகுதி, தரமான உணவு பொருட்களை வாங்குவதற்கு செலவிடப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குடும்பங்களின் உணவு பாதுகாப்பிலும், ஊட்டச்சத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 'நான் முதல்வன்' திட்டம் தொடர்பாக, 2024 டிசம்பர் முதல் கடந்த மே மாதம் வரை, 52 பொறியியல் கல்லுாரிகள் மற்றும் 72 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 9,000 மாணவ, மாணவியரிடம் கேட்டறியப்பட்டது. கல்லுாரி முடித்து துவக்க நிலை பணிக்கு செல்லும் மாணவர்களின் தொழில் கற்றல் திறன், இத்திட்டத்தின் காரணமாக மேம்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.