உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வீல் சேர் இல்லாமல் இருக்குமா?

அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வீல் சேர் இல்லாமல் இருக்குமா?

சென்னை,:கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவருக்கு, 'வீல் சேர்' மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, ''கோவை எவ்வளவு பெரிய மருத்துவமனை; அங்கு, ஒரு வீல் சேர் கூடவா இல்லாமல் இருக்கும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். கோவையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், 84 வயதான தன் தந்தைக்கு சிகிச்சை பெற, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, வீல் சேர் தர மருத்துவமனை ஊழியர்கள் மறுத்ததால், தந்தையை தோளில் சுமந்தபடி காளிதாஸ் அழைத்து சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானது. இது குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: அரசு மருத்துவமனை சேவையை குறைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, 'கேமரா'க்களை வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருக்கின்றனர். அது மிகப்பெரிய மருத்துவமனை. தினசரி 4,000 பேர் வரை வரும் மருத்துவமனை. மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு, வீல் சேர் எடுத்து வர சென்ற நேரத்தில், ஆதங்கத்தின் காரணமாக தந்தையை துாக்கிக் கொண்டு செல்கிறார். அதை உடனே அருகில் இருப்பவர்கள், வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர். அதையெல்லாம் விசாரிக்காமல், ஊடகங்களிலும் செய்தி வெளியிடுகின்றனர். இவ்வளவு பெரிய மருத்துவமனையில் வீல் சேர் இல்லாமலா இருக்கும்? எந்த ஒரு செய்தி போடுவதாக இருந்தாலும், அதற்குரிய உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வேண்டும். உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாக உள்ளது. 'மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் அளிப்பவர்களுக்கு, அரசு மரியாதை' என, 2024ல் அறிவிக்கப்பட்டது. இதன்பின், 513 பேர் உடல் உறுப்புகளை தானம் அளித்துள்ளனர். அவர்களை மேலும் கவுரவிக்கும் வகையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 'வால் ஆப் ஹானர்' என்ற மதிப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை