உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கலுக்கு ரயிலில் ஊருக்கு செல்ல 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

பொங்கலுக்கு ரயிலில் ஊருக்கு செல்ல 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

சென்னை: 'பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர், வரும் 15ம் தேதி முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜன., 14ம் தேதி போகி பண்டிகை, ஜன., 15ல் தைப்பொங்கல், 16ல் மாட்டுப்பொங்கல், 17ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவர். இதற்கிடையே, ஜன., 9ம் தேதி, பொங்கலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணியர், நேற்று முன்பதிவு செய்தனர். இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: விரைவு ரயில்களில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஜன., 14ம் தேதி போகி பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோர், வரும் 15ம் தேதியிலும், பொங்கலுக்கு செல்வோர், வரும் 16ம் தேதியிலும், முன்பதிவு செய்யலாம். இந்த இரண்டு நாட்களில் பயணிக்க அதிகம் பேர் முன்பதிவு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல், பண்டிகை முடிந்து, ஜன., 18, 19ல் திரும்புவோர், வரும் 19, 20ம் தேதிகளிலும் முன்பதிவு செய்யலாம். விரைவு ரயில்களில், பயணியர் தேவை கருதி, கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் இறுதியில், பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ