பழனிசாமி குறித்து அவதுாறு யு டியூபர் ஆஜராக உத்தரவு
சென்னை,:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியதாக, 'யு டியூபர்' ஸ்ரீவித்யா மீதான வழக்கை விசாரணைக்கு ஏற்று, அவருக்கு 'சம்மன்' அனுப்பும்படி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு துணை செயலர் எஸ்.தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனு:'திராவிட நட்பு கழக'த்தின் மாநில துணை தலைவராக, 'யு டியூபர்' ஸ்ரீவித்யா இருக்கிறார். இவர், கடந்தாண்டு பிப்ரவரியில், யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பழனிசாமி குறித்தும், பிராமண சமூகம் குறித்தும், அவதுாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஸ்ரீ வித்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநகர போலீஸ் கமிஷனரிடம், கடந்தாண்டு பிப்., 24ல் புகார் அளிக்கப்பட்டது; எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பழனிசாமிக்கு எதிராக அவதுாறு கருத்து தெரிவித்த ஸ்ரீவித்யா மீது வழக்குப்பதிவு செய்வதோடு, அந்த வீடியோவை நீக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த, சென்னை சைதாப்பேட்டை 11வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் என்.சுல்தான் அரிபீன், அவதுாறு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், ஸ்ரீவித்யா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டதுடன், ஜூன் 26ம் தேதி, ஸ்ரீ வித்யா நேரில் ஆஜராகி சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.