எக்ஸ் சமூக தளத்துக்கு தடை பிரேசில் உச்ச நீதிமன்றம் அதிரடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பிரேசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் லுாலா டா சில்வா அதிபராக உள்ளார். கடந்த 2022ல் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர் வெற்றி பெற்றார். இவரது வெற்றி குறித்து, அந்த தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் சந்தேகம் எழுப்பினார். அவற்றை பின்பற்றி பலரும் தேர்தல் நடைமுறை குறித்த குற்றச்சாட்டுகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவற்றில் பல போலி தகவல்கள் என்றும், பல கணக்குகள் முடக்கப்பட்டிருந்தவை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் விசாரித்து வந்தார். இந்த விசாரணையின் போது, முன்னாள் அதிபர் போல்சனரோ கட்சியினர் சிலரின் எக்ஸ் கணக்குகள் மீது நடவடிக்கை எடுத்தார்.இதை எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கண்டித்தார். லிபரல் கட்சியினரின் கருத்துகளை நீதிபதி டிமொரேஸ் சட்டவிரோதமாக தணிக்கை செய்வதாக கூறினார். மேலும், தன் உத்தரவுப்படி குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை நீக்காததற்காக, பிரேசிலில் உள்ள எக்ஸ் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்படுவர் என கூறினார். இதனால், பிரேசிலில் உள்ள எக்ஸ் அலுவலகத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் மூடினார்.இந்நிலையில், எக்ஸ் சார்பில் பிரேசிலுக்கான சட்ட நடவடிக்கை செயல்பாட்டு அதிகாரியை, 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதை எலான் மஸ்க் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பிரேசிலில், எக்ஸ் தளத்துக்கு நீதிபதி நேற்று தடை விதித்தார்.மேலும், சட்ட விதிகளுக்கு இணங்காததற்காக எக்ஸ் தளத்துக்கு விதிக்கப்பட்ட 25 கோடி ரூபாய் அபராதத்தை, பிரேசிலில் உள்ள மஸ்கின் மற்றொரு நிறுவனமான 'ஸ்பேஸ்எக்ஸ்' உடைய ஸ்டார்லிங்க் சேட்டிலைட் இணைய சேவையிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டார்.வி.பி.என்., எனும் தனியார் நெட்வொர்க் வாயிலாக, நாட்டில் யாரேனும் எக்ஸ் தளத்தை பயன்படுத்தினால் நாளொன்றுக்கு 7.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.