| ADDED : ஜூன் 09, 2024 11:51 PM
மாஸ்கோ: தன் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து ரகசியம் காத்து வந்தார். இந்நிலையில், அவருடைய இரண்டு மகள்கள், பொது நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்றனர்.ரஷ்ய அதிபராக நீண்டகாலமாக பதவியில் இருந்து வருகிறார் விளாடிமிர் புடின், 71. இவர், தன் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து ரகசியம் காத்து வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதைத் தவிர மேலும் சில குழந்தைகள் உள்ளதாகவும், அவர்களுடைய அடையாளங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.பொதுவெளியில் அல்லது நிகழ்ச்சிகளில், புடினின் இரண்டு மகள்கள் இதுவரை பங்கேற்றதில்லை. இந்நிலையில், செயின்ட் பீட்டஸ்பர்கில் நடந்த ஒரு வர்த்தக, தொழில் மற்றும் வணிகக் கண்காட்சியில் அவரது இரண்டு மகள்களும் பங்கேற்று உரையாற்றினர்.முதல் மகளான மரியா வோரன்ட்சோவா, 39, மரபணு ஆராய்ச்சியாளராக உள்ளார். அடுத்த மகள் கேத்தரினா டிக்கனோவா, 37, தொழில்நுட்ப நிபுணராகவும், நடனக் கலைஞராகவும் உள்ளார்.இது குறித்து, அமெரிக்க உளவு அமைப்புக்கு நீண்ட காலம் பணியாற்றிய, சி.ஐ.ஏ., ஏஜென்ட் ரொனால்டு மார்க்ஸ் கூறியுள்ளதாவது:ரஷ்யா, புடினின் உலகம். அங்கு அனைத்துமே புடின்தான். தன் சாம்ராஜ்ஜியத்தை அவர் உருவாக்கியுள்ளார். அது தொடர வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதற்காகவே, தன் மகள்களை தற்போது அவர் அறிமுகம் செய்துள்ளார்.எந்த நேரத்திலும் தனக்கு மரணம் ஏற்படலாம் என்று நினைத்துஇருக்கலாம். அவருடைய வயதும் அதிகரித்துள்ளது. அதனால், தனக்குப் பின், தன் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துச் செல்ல வேண்டியதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இதை செய்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.