கொழும்பு: இலங்கையில், அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு, பொது இடங்களில் உள்ள சட்ட விரோத போஸ்டர், கட் அவுட், பேனர் ஆகியவற்றை அகற்றும் பணியில், 1,500 பேரை அந்நாட்டு போலீசார் பணியமர்த்தி உள்ளனர்.நம் அண்டை நாடான இலங்கையில், செப்., 21ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி சார்பில், அவரது மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2019ல் நடந்த அதிபர் தேர்தலில், 35 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை, 39 பேர் போட்டியிடுகின்றனர். 2.1 கோடி மக்கள் தொகை உடைய இலங்கையில், 1.7 கோடி பேர் ஓட்டளிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு, பொது இடங்களில் உள்ள சட்ட விரோத போஸ்டர், கட் அவுட், பேனர் ஆகியவற்றை அகற்றும் பணியில், 1,500 பேரை அந்நாட்டு போலீசார் பணியமர்த்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:தேர்தல் பிரசார விதிகளை மீறி, வேட்பாளர்கள் காட்சிப்படுத்திய பொருட்களை அகற்றுவதற்காக, மாகாண போலீஸ் ஸ்டேஷன்களில், 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். சட்ட விரோதமாக உள்ள போஸ்டர்கள், கட் அவுட்கள், பேனர்கள் ஆகியவற்றை இவர்கள் அகற்றுவர். இவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.