| ADDED : ஜூன் 12, 2024 01:14 AM
பிளாண்டைர்,தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியில், துணை அதிபர் மற்றும் முன்னாள் அதிபரின் மனைவி உள்ளிட்ட 10 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. அதில் சென்ற துணை அதிபர் உள்ளிட்ட 10 பேரும் பலியாகினர்.தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் தலைநகர் லிலாங்வேயில் இருந்து, நேற்று முன்தினம் காலை ராணுவ விமானம் மிசுசு நகருக்கு சென்றது.துணை அதிபர் சவுலாஸ் சிலிமா, 51, முன்னாள் அதிபரின் மனைவி சானில் திசிம்பிரி உட்பட, ஏழு பயணியர் மற்றும் மூன்று விமான பணியாளர்களுடன் சென்றது.மிசுசு நகருக்கு அருகே சென்ற போது மோசமான வானிலையால் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு அறிவுறுத்தினர்.அடுத்த சில நிமிடங்களில் விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்தும் விமானம் மறைந்தது. மிசுசு அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்ற துணை அதிபர் சவுலாஸ் சிலிமா, முன்னாள் அதிபரின் மனைவி சானில் திசும்பிரி உட்பட 10 பேரும் பலியானதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்தார்.