பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் முயற்சியில், மத்திய குற்றப்பிரிவின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பிகேஹள்ளியில் உள்ள பி.டி., லே - அவுட் பகுதியில், வெளிநாட்டு பெண் போதை பொருள் விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த, ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவை சேர்ந்த நான்சி ஓமரிலாவா, 29, என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, 9.25 கிலோ எடை கொண்ட, 'எம்.எம்.டி.ஏ, கிறிஸ்டல்' போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்; இதன் மதிப்பு, 18.50 கோடி ரூபாய். நான்சி கைது செய்யப்பட்டார். இவர் 2023ல் சுற்றுலா விசாவில் டில்லி வந்தார். அங்கிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அழகு சாதன நிலையத்தில் முடி திருத்துபவராக பணிபுரிந்தபடியே, குறைந்த விலைக்கு போதை பொருட்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோல, லால்பாக் தாவரவியல் பூங்கா தெற்கு கேட் பகுதியில், போதை பொருள் கடத்த முயன்ற நைஜீரியாவை சேர்ந்த இம்மானுல் அரென்ஜி இடிகோ, 28, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம், 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.15 கிலோ எம்.எம்.டி.ஏ., கிறிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டது. சாம்ராஜ்பேட்டில் உள்ள தபால் நிலையத்துக்கு சந்தேகத்துக்கு இடமான பார்சல் வந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், 'சீல்' செய்யப்பட்ட பார்சலில் இருந்த, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பார்சலில் இருந்த முகவரியின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இப்படி தனித்தனி வழக்குகளில், 29 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.