உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓராண்டை கடந்தது போர்: காசாவில் நீடிக்கும் ஓலம்!

ஓராண்டை கடந்தது போர்: காசாவில் நீடிக்கும் ஓலம்!

ஜெருசலேம்: கடந்தாண்டு அக்., 7ல், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை அளித்தனர். இதைத் தொடர்ந்து துவங்கிய போர் ஓராண்டை எட்டியுள்ளது. அந்த தாக்குதலில் உயிரிழந்த 1,200 இஸ்ரேலியர்கள் வீடுகளில் சோகம் நிறைந்திருந்தது. அதே நேரத்தில், காசா பகுதியில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டு வருகிறது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா, மேற்கு கரை அடங்கிய பாலஸ்தீனம் இடையே நீண்ட காலம் மோதல் உள்ளது. காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தனர். இரு தரப்புக்கும் மோதல் தொடர்ந்து நடந்து வந்தது.கடந்தாண்டு அக்., 7ல், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்தினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஏவுகணைகளை செலுத்தியும், தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத இஸ்ரேல் நிலைகுலைந்தது. அந்த நாளில் ஒரு சில மணி நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில், இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.இந்தப் போர், இஸ்ரேல் - லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போராகவும் மாறியது. இதைத் தவிர, இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல் மீது சமீபத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் ஓராண்டு நிறைவையொட்டி, இஸ்ரேலில் நேற்று பல பகுதிகளில் இரங்கல் கூட்டங்கள், அமைதி ஊர்வலங்கள், பிரார்த்தனைகள் உள்ளிட்டவை நடந்தன.இஸ்ரேலின் தென் முனையில், காசாவை ஒட்டியுள்ள ரேயிம் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், நோவா இசைத் திருவிழா கடந்தாண்டு அக்., 7ல் நடந்தது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அதிக உயிர் சேதம் ஏற்பட்டது இந்த பகுதியில் தான்.இந்த பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று கூட்டங்கள் நடந்தன; பெண்கள் கண்ணீர் விட்டு அழுது, சோகத்தில் இருந்தனர்.இது நடந்த அதே நேரத்தில், அப்பகுதி மக்கள் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தையும் கேட்டனர். இஸ்ரேல் ராணுவம், காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் ஏற்பட்டசத்தமே அது.ஓராண்டு நடந்த போரில், காசா பகுதியில் 40,000 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.தற்போதைய நிலையில், 100க்கும் குறைவான பிணைக் கைதிகளே ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும், 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் அச்சம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தற்போது மும்முனை போராக மாறியுள்ளது. மேலும், ஈரான் சமீபத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, இஸ்ரேல் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர, காசாவின் வடக்கு பகுதியை முற்றிலுமாக இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது. காசாவில் வசிக்கும் 19 லட்சம் பேரும் புலம் பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர்.''அக்., 7ம் தேதி நாங்கள் மக்களை பாதுகாப்பதில் இருந்து தோல்வியடைந்த நாள். அது நமக்கு மிகவும் மோசமான நாள். ஆனால், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தையதைவிட எதிரிக்கு இன்னும் மோசமாக இருக்கும்,'' என, இஸ்ரேல் ராணுவ தளபதி ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.இந்தப் போர் முடிந்தவுடன், இஸ்ரேலை அழிக்க நினைப்பவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவர் என்பதை காட்டுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், தற்போதைக்கு இந்தப் போர் ஓயாது என்பது தெரிகிறது. ஆனால், இஸ்ரேலின் சோகமும், காசாவில் மரண ஓலமும் அடங்காது.

ஏவுகணைகள் ஏவிய ஹமாஸ்!

போர் துவங்கி ஓராண்டை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை கைவிடுவதாக தெரியவில்லை. ஒரு பக்கம் இஸ்ரேல் ராணுவம், காசாவில் நேற்று தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே, காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தினர். இதையடுத்து, டெல்அவிவ் நகரில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன் ஒலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
அக் 08, 2024 07:47

வினை விதைத்தவன் வினை அறுப்பான்..... உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்.


Kasimani Baskaran
அக் 08, 2024 06:17

இஸ்ரேல் உருவான பொழுது அதற்கான இடத்தை ஓட்டமான் பேரரசின் பகுதிகளில் இருந்து பால்போர் பிரகடனத்தின் படி பிரிட்டன் வாங்கிக்செய்து கொடுத்தது. இஸ்ரேல் வளரும் பொழுதே பாலஸ்தீனமும் வளர, செழிக்க இஸ்ரேல் பல வழிகளில் தாராளமாக உதவி செய்தது. வேலை வாய்ப்புக்களை வாரி வழங்கியது. மற்ற அண்டை நாடுகளை விட பாலஸ்தீனம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் நன்றிக்கடனாக பாலஸ்தீனம் தீவிரவாதம் செய்ய அண்டை நாடுகளுடன் கூட்டணி அமைத்து வேலை செய்தது. அதனால் அழிவு வந்தது. இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் பாம்புக்கு பால் வார்த்துக்கொண்டேதான் வந்திருக்கிறது.


நிக்கோல்தாம்சன்
அக் 08, 2024 05:48

இவ்ளோ நாள் எதற்கு இந்த தேவையில்லாத போர் நீடிக்கிறது என்று நினைத்துள்ளேன் , ஆனால் இப்போது முழு மனதோடு இஸ்ரேலை ஆதரிக்கிறேன் , ஹெஸ்பொல்லா , ஹமாஸ், அல் குவைதா , பாகிஸ்தான் போன்ற அரபு தீவிரவாத குழுக்கள் முழுமையாக அளிக்கப்படவேண்டும்


சமீபத்திய செய்தி