சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் ஆப்கன் - பாகிஸ்தான் ஒப்பந்தம்
இஸ்லாமாபாத்: கடந்த ஒரு வாரமாக ஆப்கானிஸ்தான் மற்றும் -பாகிஸ்தான் இடையே எல்லையில் கடுமையாக சண்டை நடந்து வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுடன் சண்டையை நிறுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தான், மற்றொரு பக்கம் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் -- இ -- தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், டி.டி.பி., தலைவரை குறிவைத்து ஆப்கானிஸ்தானின் காபூலில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான், பாக்., எல்லையில் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதனால், 48 மணிநேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அது நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. அதன் பின், ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மேற்காசிய நாடுகளான கத்தார் மற்றும் துருக்கி இரு நாடுகளிடமும் அமைதிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் குழுக்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று பேச்சு நடத்தின. 'அதில் உடனடி சண்டை நிறுத்தத்திற்க்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தன. மேலும், நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டன' என, கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.