| ADDED : நவ 27, 2025 12:22 AM
அடிஸ் அபபா: எத்தியோப்பியாவின் ஹைலி குப்பி எரிமலையின் சீற்றம் தணிந்த போதிலும், அதன் சாம்பல் புகை மண்டலம் வான் பரப்பை சூழ்ந்திருப்பதால், சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் பகுதியில் உள்ள ஹைலி குப்பி எரிமலை, 12,000 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக கடந்த 23ம் தேதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், எரிமலையில் இருந்து 14 கி.மீ., உயரத்துக்கு சாம்பல் புகை மண்டலம் வெளியேறியது. அந்த புகை மண்டலம், செங்கடல் வழியாக ஏமன், ஓமன், வடக்கு பாகிஸ்தானை கடந்து, இந்திய வான் பரப்பையும் ஆக்கிரமித்தது. இதனால், கடந்த இரு நாட்களில், இந்தியாவில் இருந்து பல சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மூன்று நாட்களை கடந்தும் எரிமலை சீற்றம் தொடர்ந்தாலும், தற்போது சற்று தணிந்துள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துவங்கியுள்ளன. இருப்பினும், காற்று பலமாக வீசியதால், செங்கடல் மற்றும் அரபு தீபகற்பங்களின் வான் பரப்பில் சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.