உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மரில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம்; 500 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு

மியான்மரில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம்; 500 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு

புதுடில்லி: மியான்மரில் இருந்து தப்பி, தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள, 500 இந்தியர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், உலக மோசடிகளின் தலைநகரமாக அழைக்கப்படும் மியாவாட்டி பகுதி உள்ளது. தாய்லாந்து எல்லையில் உள்ள இப்பகுதியில் கே.கே. பார்க் வளாகத்தில் சீன மாபியா கும்பல் நடத்தும் சைபர் மோசடி மையங்கள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் மியான்மரை சேர்ந்த ராணுவ ஆட்சிக் குழு இந்த மோசடி மையங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது. அப்போது இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக கூறி கடத்தி வரப்பட்டவர்களை சைபர் மோசடி பணிகளில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவோம் என்ற பீதியில் இங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மோய் ஆற்றில் குதித்து தாய்லாந்துக்கு தப்பினர். அவர்களில், 500 இந்தியர்களை மீண்டும் பத்திரமாக தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இது குறித்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் கூறியதாவது:

மியான்மரில் இருந்து தப்பி வந்த, 500 இந்தியர்கள் தற்போது தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள மா சாட்டில் தங்கியுள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்துச் செல்ல இந்திய அரசு நேரடி விமான சேவையை இயக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பாங்காங்கில் உள்ள இந்திய துாதரகம் மூலம் தாய்லாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ''தாய்லாந்து அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறோம். சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின், அவர்கள் அனைவரும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர்,'' என்றார். இதே போல், கடந்த மார்ச் மாதம் மியான்மரில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சமடைந்த, 549 இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ