டாக்கா: வங்கதேசத்தில், துர்கா பூஜை பந்தல் மீது பெட்ரோல் குண்டு வீசியது, இஸ்லாமிய புரட்சி பாடல்களை பாடியது உட்பட, 35க்கும் மேற்பட்ட சம்பவங்கள், அரங்கேறி உள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்,17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 17 கோடி மக்கள் வசிக்கும் இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் 8 சதவீதம் பேர் ஹிந்துக்கள். அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, ஹிந்துக்களின் சொத்துக்கள், வர்த்தக நிறுவனங்கள், கோவில்கள் சூறையாடப்பட்டன.மேற்கு வங்கத்தைப் போலவே, நம் அண்டை நாடான வங்கதேசத்திலும் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 32,000க்கும் மேற்பட்ட பந்தல்கள் அமைக்கப்பட்டன. புரட்சி பாடல்கள்
இந்த கொண்டாட்டங்களின்போது, 35க்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி உள்ளன; 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைதாகி உள்ளனர்.டாக்கா அருகே உள்ள சத்தோகிராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலில் நுழைந்த ஏழு பேர், இஸ்லாமிய புரட்சி பாடல்களை பாடினர். இதனால், அங்கு திரண்டிருந்த ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 'துர்கா பூஜை பந்தலில், இஸ்லாமிய ஜிகாத் பாடல்களை நீங்கள் பாடியதைப் போல, மசூதி தொழுகையின் போது, ஹிந்துக்கள் நுழைந்து ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா பாடினால் என்ன ஆகும்' என, கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் குண்டு
இதுமட்டுமின்றி, டாக்காவில் உள்ள டாட்டி பஜார் என்ற இடத்தில், துர்கா பூஜை பந்தல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஒருவர் காயம் அடைந்தார்.
மத்திய அரசு கண்டனம்
இதுகுறித்து நம் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள் மீதும், துர்கா பூஜை பந்தல்கள் மீதும் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஹிந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதையும், அவர்கள் தங்கள் பண்டிகைகளை அச்சமின்றி கொண்டாடுவதையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, டாக்காவில் உள்ள மிகப் பழமையான தாகேஸ்வரி கோவிலுக்கு நேற்று சென்ற, வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், ''நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்,'' என்றார்.