கார்பன் உமிழ்வு: 10 ஆண்டு திட்டத்தை அறிவித்தது சீனா
நியூயார்க்:உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழ்வு நாடான சீனா, அடுத்த 10 ஆண்டுக்கான புதிய காலநிலை இலக்கை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.,வின் காலநிலை உச்சி மாநாடு நடந்துவருகிறது. இதில் பேசிய நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜின்பிங், 2035ம் ஆண்டுக்குள் கார்பன் மாசுபாட்டை தற்போதுள்ள உச்சபட்ச உமிழ்வு அளவில் இருந்து 7 முதல் 10 சதவீதம் குறைக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசிய அவர் கூறியதாவது: அடுத்த 10 ஆண்டுக்குள் சீனாவின் காற்று மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தி திறனை கடந்த 2020ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மொத்த உ ள்நாட்டு எரிசக்தி நுகர்வில் புதைபடிமமற்ற எரிபொருட்களின் பங்கை 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். வளர்ந்த நாடுகள் வலுவான காலநிலை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளில் இருந்து விலகிச் செல்கின்றன. பசு மை மற்றும் குறைந்த கார்பன் மாற்றம் என்பது காலத்தின் தேவை. சில நாடுகள் இப்போக்குக்கு எதிராக சென்றாலும், சர்வதேச சமூகம் சரியான பாதையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உலகளவிலான கார்பன் - டை - ஆக்சைடு வெளியேற்றத்தில், 34 சதவீதத்துடன், சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, 12 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், 7.6 சதவீதத்துடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.